தமிழ்நாடு

வைகோ இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழிசை காட்டம்!

Published

on

மாநிலங்களவையில் தமிழக நலன் மற்றும் பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதில் இருந்தே தனது பேச்சுக்களால் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய வைகோ, தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும் என்றார்.

இந்நிலையின் வைகோவின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வைகோ தொடர்ந்து எதிர்மறையாக பேசிவருவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சோமாலியா, நாகசாகி, ஹிரோஷிமா என அழிந்த பகுதிகளை தமிழகத்துடன் ஒப்பிடுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். வைகோ நினைப்பதைப் போல தமிழகம் அழிவுப் பாதைக்குச் செல்லவில்லை.

பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்தான். தமிழகத்திலுள்ள சாமானியனின் உயிர் காக்கப்படுவதை தமிழகம் அழிக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறாரா? பயிர் காப்பீட்டுத் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம்தான், மோடி அரசில் தமிழகம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என்று பதில் அளித்தார்.

Trending

Exit mobile version