இந்தியா

புதுவையின் புதிய கவர்னர் தமிழிசையின் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Published

on

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து இன்று முதல் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுவையில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகியதை அடுத்து காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை முதல்வரை அழைத்து அவர் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வாரா அல்லது ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இருப்பினும் கிரண்பேடி பதவி நீக்கத்தை முதல்வர் நாராயணசாமி உள்பட காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான திட்டங்கள் இயற்றியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த புதிய கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களாவது சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version