தமிழ்நாடு

இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!

Published

on

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டதாக கூறினார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார் தற்போது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழாவில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது அந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஸ்டாலின் கனவு காண்கிறார் என என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் மக்கள் அவர்களின் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இன்னும் சிலர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்கள். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது. கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன் என்று கூறினார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வெற்றிடத்தை நிரப்பிவிட்டதைப் போல ஸ்டாலின் சொல்லிக்கொள்கிறார். 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பிருந்தும் திமுக தோல்வியடைந்துள்ளது. திமுக ஆட்சியமைத்துவிடக் கூடாது என்பதற்காக மக்கள் அவர்களை நிராகரித்திருக்கிறார்கள் என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்ற சூழல்தான் இந்த தேர்தலில் உருவாகியிருக்கிறது. கலைஞர் மிகப்பெரிய தலைவர், அதில் சந்தேகமில்லை. அதனை முற்றிலுமாக ஸ்டாலின் பிரதிபலிக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version