தமிழ்நாடு

உதயநிதி தமிழச்சியை அழகு என சொன்ன சர்ச்சை: தமிழச்சி விளக்கம்!

Published

on

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சியை, அழகான வேட்பாளரை நாடாளுமன்ற அனுப்ப தவறாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அதற்கான விளக்கத்தை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியனின் தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவர்.

அப்போது பேசிய அவர், என்னுடைய அக்கா தமிழச்சி. இவ்வளவு அழகான வேட்பாளரை தென்சென்னை தொகுதி மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறவிடாதீர்கள். அழகு என்று நான் சொல்வது அவருடைய தோற்றத்தை அல்ல. அவருடைய அழகு தமிழையும், கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் கொண்ட அன்பையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கையையும், திமுக மீதான கொள்கைப் பிடிப்பையும்தான் அழகு என்று சொல்கிறேன் என்றார்.

ஆனால் இதனை விடாத சமூக வலைதளவாசிகள் அவர் அழகான வேட்பாளர் என கூறியதை விமர்சித்து அந்த வீடியோவை வைரலாக பரப்பினர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன் இதற்கான விளக்கத்தை அளித்தார். அதில், பெண்கள் பொதுவெளியில் வந்தாலே சமூக ஊடகங்கள்தான் ஏதேனும் சிறிய விஷயத்தைக் கூட பெரிதுபடுத்திக் காண்பிக்கின்றன.

அழகு என்று கூறியதற்கான விளக்கத்தை உதயநிதியே தந்துள்ளார். தமிழச்சியின் அழகு என்பது தமிழ் சார்ந்தது, திமுகவின் மீது அவரது குடும்பம் வைத்திருக்கும் பற்று சார்ந்தது என்று கூறியிருக்கிறார். ஒரு கருத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொடக்க உரையை மட்டும் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனம் செய்வது ஆரோக்கியமானது கிடையாது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version