தமிழ்நாடு

நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

Published

on

தமிழக பாஜக தலைவராக சற்றுமுன் பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை தமிழக பாஜக வலியுறுத்தும் என்றும் நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்படும் என்று கூறினார்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்கிறது என்றும், மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வினியோகம் செய்ய தனித்தனி முறை பின்பற்றப்படவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மூத்த தலைவர்களை கலந்து ஆலோசித்து தமிழக பாஜக முக்கிய முடிவுகள் எடுக்கும் என்றும் 37 வயதில் தமிழக பாஜக தலைவர் ஆகிய எனக்கு மூத்த தலைவர்கள் வழிகாட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற மிகப்பெரிய ஒரு பொறுப்பாக கருதுகிறேன் என்றும் இந்த பணியை நான் ஒழுங்காக செய்வேன் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் ஆகியோர் பாஜகவை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர் என்று கூறிய அண்ணாமலை அவர்கள் செய்த நல்ல விஷயத்தை இனி கூட்டாக எடுத்து செல்வேன் என்றும், முன்னாள் மாநில தலைவர் முருகன் அவர்கள் கூறியபடி தமிழ்நாட்டில் உள்ள 11000 கிராமத்திற்கு சென்று கட்சியை வளர்க்க ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version