இந்தியா

சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார்!

Published

on

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுச்செய்தி கேட்டு டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. அவருக்கு வயது 67.

மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த சுஷ்மா தனது 25-வது வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார். வாஜ்பாய், அத்வானி ஆகிய இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்ட சுஷ்மா டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார். ஆனால் தனது உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அவர். இதனையடுத்து உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த சுஷ்மா ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என அவரது மறைவை உறுதி செய்தனர்.

இவரது மறைவுச் செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version