சினிமா செய்திகள்

மாதம் ஒரு திரைப்படம்: சூர்யாவின் 4 திரைப்படங்கள் ரிலீஸ் அறிவிப்பு!

Published

on

சூர்யாவின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நான்கு திரைப்படங்கள் மாதம் ஒரு திரைப்படமாக நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக வெளியாக இருப்பதாக சூர்யா தன்னுடைய டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக சூர்யா தன்னுடைய தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராரா’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் அமேசானில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணிபோஜன் உள்பட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சூர்யாவின் தயாரிப்பில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் ’உடன்பிறப்பே’. இந்த படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, உள்பட பலர் நடித்துள்ளார்கள். டி. இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை இரா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக நவம்பர் மாதம் சூர்யா நடிப்பில் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் அமேசனில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து டிசம்பர் மாதம் சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அர்னவ் அருண்விஜய் நடிப்பில் உருவாகிய ’ஓ மை டாக்’ என்ற திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகுமார், அருண்விஜய், அர்னவ் அருண்விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.

எனவே செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என நான்கு திரைப்படங்கள் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாக உள்ளது என்பதும் அவற்றில் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் ஜெய்பீம் அவர் நடித்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version