இந்தியா

“நீ கோடியில புரள்ற கம்பெனியா இருக்கலாம்…”- WhatsAppக்கு உச்ச நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி உத்தரவு

Published

on

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம் தெரிவித்தது. அதன்படி வாட்ஸ்அப்பின் புதிய பிரைவஸி கொள்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தங்களது சேவையைப் பயன்படுத்த முடியாது என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய பிரைவஸி பாலிசியின் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது. பலரும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய பிரைவஸி பாலிசியைக் கடுமையாக விமர்சித்தார்கள். பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் தற்போதைக்குப் பிரைவஸி கொள்கைகளில் எந்த வித மாற்றங்களும் செய்யப் போவதில்லை என்று பல்டியடித்தது வாட்ஸ்அப்.

இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றத்திலும் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதில், ‘வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற நாடுகளில் வேறு வகையாக பிரைவஸி கொள்கைகளையும் இந்தியாவில் வேறு முறையையும் கடைபிடிக்கிறது. இந்தியாவுக்கு அந்நிறுவனம் பாரபட்சம் காட்டுகிறது’ என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஐரோப்பாவில் செயலிகளுக்கு என தனிச் சட்டங்கள் உள்ளன. இந்தியாவில் இல்லை. அப்படி வரும் போது, அது பின்பற்றப்படும்’ என்றார்.

அதற்கு நீதிமன்றம், ‘சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் பங்கம் ஏற்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.

வாட்ஸ்அப் நிறுவனம் பல கோடி மதிப்புடைய நிறுவனமாக இருக்கலாம். ஆனால், அதற்காக மக்களின் பிரைவஸியை குலைக்கக் கூடாது’ என்று கூறி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Trending

Exit mobile version