இந்தியா

ஆண்கள் மட்டும் எழுதும் தேர்வுக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்: பெண்களும் எழுதலாம் என உத்தரவு!

Published

on

ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும் என்டிஏ நுழைவுத்தேர்வை ஆண்கள் மட்டுமே எழுத முடியும் என்றும் பெண்கள் எழுத அனுமதி கிடையாது என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவான இந்த முடிவை எதிர்த்து குஷ்கால்ரா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராணுவத்தில் சேருவதற்கு நிறைய வழிகள் உள்ளதாகவும் அதில் ஒரு வழிதான் என்டிஏ என்றும் ஆனால் இதுமட்டுமே ராணுவத்தில் சேருவதற்கான வழி கிடையாது என்றும் இதனால் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனுதாரர் தரப்பில் வாதிடும்போது என்டிஏ தேர்வில் பெண்கள் எழுத அனுமதி மறுக்கப்படுவது பாலின சம உரிமைக்கு எதிரானது என்றும், பெண்களுக்கான உரிமையை இது மறுக்கிறது என்றும், பெண் ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான உத்தரவு இது என்றும், பெண்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதம் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19 எதிரானது என்றும் தெரிவித்தனர்.

பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் என்டிஏ நுழைவுத் தேர்வை பெண்கள் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே பெண்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் இது இடைக்கால உத்தரவு தான் என்றும் இந்த வழக்கின் முழு விசாரணை முடிந்த பின்னர் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version