தமிழ்நாடு

10.5% இடஒதுக்கீட்டின் நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு மசோதா செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் இந்த இட ஒதுக்கீட்டின்படி கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் மற்றும் பணி நியமனங்கள் பெற்ற ஊழியர்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது 10.5% இட ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்று கூறிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் மறுப்பு தெரிவித்தனர். எனவே உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version