இந்தியா

சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மாதவிலக்கு வருவதால் தீட்டு எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர், நரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற நான்கு நீதிபதிகளும் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்தனர்.

சபரிமலையில் அனைத்துப்பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உடல் மற்றும் உளவியல் காரணங்களை சுட்டிக்காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துகள். இதில் பாகுபாடு கூடாது. தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது. வழிபாடு என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version