சினிமா செய்திகள்

சூப்பரா.. சுமாரா.. சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்!

Published

on

சூப்பர் டீலக்ஸ் படம் சூப்பர் என்று சொல்லும் கூட்டமும் இருக்கும், சுமார் என்று சொல்லும் கூட்டமும் இருக்கும், இதெல்லாம் ஒரு படமா என சொல்லும் கூட்டமும் இருக்கும், அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை படமாக இயக்கி அசத்தியுள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

கமர்ஷியல் வெற்றியை படம் பெறுமா? என்பது சந்தேகமே? ஆனால், விமர்சன ரீதியாக படம் வெற்றி பெற்று விட்டது.

ஒரு படத்தில் 3 கதைகள் அவை தனித்தனியே பயணிக்கின்றன. பின்னர், ஒரு கதை மற்றொரு கதையுடன் தொடர்பு கொள்கிறது. இறுதியில், அனைத்து கதைகளுக்கும் சூப்பரான க்ளைமேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் படம் போராக நகர்ந்தாலும், அடுத்து என்னாகும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாகவே நகர்கிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மெல்லிசை மற்றும் சீதக்காதி படங்களில் விஜய்சேதுபதியுடன் நடித்த நடிகை காயத்ரியின் கணவராக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

துபாய்க்கு வேலைக்கு சென்று திரும்பும் போது, தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தால், விஜய்சேதுபதி திருநங்கையாக மாறி விடுகிறார்.

திருநங்கை தோற்றத்தில் தனது தந்தையை மகன் பார்க்கும் காட்சி படத்தில், எப்படி ஜீரணிக்க முடியாமல், தவிக்க வைக்கிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பின்னர், விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அவரைத் துரத்தும் பிரச்னைகளும் ஒரு டிராக்.

நண்பனின் வீட்டில் பிட்டு படம் பார்க்க, நான்கு நண்பர்கள் செல்கின்றனர். அவர்கள் பார்க்கும் பலான படத்தில், ரம்யா கிருஷ்ணன் வருகிறார். அவர், அந்த நான்கு பசங்களில் ஒருவனின் தாய், இதனால், தனது தாயை கொல்ல மகன் செய்யும் முயற்சிகள் ஒரு கதையாக இருக்கிறது.

சமந்தாவை ஃபகத் ஃபாசில் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், சமந்தா தனது பழைய காதலரை கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அழைத்து உடலுறவு கொள்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அப்போது அவரது காதலர் இறக்க, இந்த விஷயம் கணவன் பகத் பாசிலுக்கு தெரிய, அவர்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம். போதாக் குறைக்கு இயக்குநர் மிஷ்கினின் ட்ராக் என கலந்து கட்டி கதை எப்படி முடியும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்து பக்காவாக முடித்துள்ளார் இயக்குநர்.

ஆரண்ய காண்டம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது போல, இந்த படத்துக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண சிறுவன் முதல் பெரிய நட்சத்திரங்கள் வரை தங்களின் 100 சதவிகித நடிப்பை வெளிக்காட்டி அசத்தியுள்ளனர்.

படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது.

ஆரண்ய காண்டம் போலவே, ஆபாச வசனங்கள் எந்த ஒரு மியூட்டும் இல்லாமல், இந்த படத்திலும் பல இடங்களில் வருவது படத்திற்கு பலம் சேர்த்தாலும், பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்க வைக்கிறது.

ஒவ்வொரு சர்ச்சையான விஷயங்களையும் கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதால், பெரிய சர்ச்சை மற்றும் விவாதங்களையும் இந்த படம் உண்டு செய்யலாம்.

இந்த படம் முழுக்க முழுக்க விஜய்சேதுபதி படம் என்று நினைத்து பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். மூன்று மணி நேர மிக நீண்ட திரைப்படத்தில், வெறும் 35 நிமிடமே விஜய்சேதுபதி வருகிறார்.

சினி ரேட்டிங்: 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version