தமிழ்நாடு

கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் மூடல்: செப்.15 வரை ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்

Published

on

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் புதிய நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 வரையிலான ஊரடங்கில், செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் செல்வது நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இதர பகுதிகளிலும் கிறிஸ்தவ சமயத்தினரால் கொண்டாடப்படும் மரியன்னை பிறந்த நாள் திருவிழாவின் போதும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் ஞாயிறு அன்று பொதுமக்கள் கூறுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து நாட்களிலும் கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதை அடுத்தே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத வழிபாட்டு தலங்களில் ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டமிட்டபடி 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் சீருடை அணிந்திருந்தால் அல்லது அடையாள அட்டைகளை வைத்திருந்தாலே போதும் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version