செய்திகள்

நாடாளுமன்றத்தில் இனி ஓசி சாப்பாடு கிடையாது

Published

on

நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் பிர்லா கூறியுள்ளார்.

இனி குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு வழங்கப்படாது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கான கேன்டீன் உள்ளது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் மலிவான விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேண்டின் 1968 முதல் வடக்கு ரயில்வே நடத்தி வந்தது. இதன் பின்னர் தற்போது இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கவுள்ளது.பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து கூறியதாவது:

ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கு முன்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். எம்பிக்களுக்கு அவர்களது வீடுகளிலேயே ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்படும். ராஜ்யசபா காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். லோக்சபா மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கேண்டீனுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களும் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் கேன்டீனில் எம்பிக்கள் உணவு உண்ண கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும். மானியம் நிறுத்தப்படுவதால் நாடாளுமன்ற செயலகத்திற்கு வருடத்திற்கு 8 கோடி மிச்சமாகக் கூடும் என கருதப்படுகிறது.

Trending

Exit mobile version