தமிழ்நாடு

அனைத்து சாதியினர்களும் அர்ச்சகர்: களத்தில் இறங்குகிறார் சுப்பிரமணியன் சுவாமி!

Published

on

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சமீபத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பதும் இதனை அடுத்து அர்ச்சகர் சிலருக்கு பணி நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி ’திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திகவின் பிடியில் இருப்பதால் அவர்களுடைய தவறான வழிகாட்டுதல் காரணமாக அவர்கள் சொன்னதை கேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் என்றும், மேலும் பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசர அவசரமாக அவர் பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார் என்றும் கூறினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் படி தான் இந்து அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது என்றும், இந்த சட்டத்தின்படி பூசாரி, ஓதுவார், அர்ச்சகர் ஆகியோர்களை நியமனம் செய்யும் அதிகாரம் அறங்காவலர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், முதலமைச்சர் என்பதால் முக ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும், அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் கூறினார்.

மேலும் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை உடனடியாக முக ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை என்றும் அரசியல் சட்டத்தை முதல்வர் மதிக்காமல் இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என்றும் அதை தடுக்கவே நீதிமன்றம் செல்லப் போவதாகவும் நான் நீதிமன்றம் செல்வதற்கு முன்னால் முதல்வர் முக ஸ்டாலின் சட்டத்தை வாபஸ் பெற்றால் கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியபோது ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற விஷயத்தில் இந்து அறநிலைத்துறை சட்டத்திலிருந்து எங்கும் மீறவில்லை என்றும் விதி மீறலை ஒருவேளை சுட்டிக்காட்டினால் அதற்கு விளக்கம் அளிக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்யும் சுப்பிரமணியசாமி விரைவில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version