கிரிக்கெட்

“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது இந்தியா. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். கடைசி வரை அவர் களத்தில் இருந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் டெலிவரிகளை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்தார். கடைசியில் வெற்றிக்கான ரன்களையும் அவரே அடித்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித், பன்ட்டை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

ஸ்மித், ‘இந்தப் போட்டியை வென்றதற்கு இந்தியாவுக்கு நீங்கள் முழு பாராட்டுகளை கொடுத்தே ஆக வேண்டும். மிக அதிகமான அழுத்தம் அவர்கள் மீது இருந்தது. இருப்பினும் அவர்கள் களத்தில் அதை எல்லாம் சமாளித்து அற்புதமான கிரிக்கெட் ஆடினர். புஜாரா, வெகு நேரம் களத்தில் இருந்து எங்கள் அணியின் பவுலர்களை சோர்வடையச் செய்தார். அவருக்கு முன்னர் சுப்மன் கில்லும் நன்றாக விளையாடி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இவர்கள் எல்லோரையும் விட ரிஷப் பன்ட், இன்று ஆடிய விதம் மெச்சத் தகுந்தது. அவர் ஒரு அசாத்திய திறமை படைத்த விளையாட்டு வீரர். அதைப் பல முறை நாம் பார்த்துள்ளோம். குறிப்பாக டி20 போட்டிகளில் அதை அவர் அடிக்கடி செய்து காண்பித்து இருக்கிறார். ஆனால், இன்று டெஸ்ட் போட்டியிலும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை எல்லோருக்கும் காட்டி விட்டார்.

குறிப்பாக அவர் அதிரடியாக ஆடியதால், கேம் எங்கள் கைகளில் இருந்து நழுவி விட்டது. இந்திய அணி, இந்த தொடரை இப்படி விளையாடியதற்கு பாராட்டுகள்’ என்று மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.

எதிரணியினரே வியக்கும் அளவுக்கு இந்திய அணியினரின் ஆட்டம் இருந்துள்ளது. இந்த தொடரில் முன்னணி மற்றும் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், கேப்டன் விராட் கோலியே இல்லாத நிலையிலும் இந்தியா, வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றி வரலாற்றில் பதிக்கப்படும்.

Trending

Exit mobile version