தமிழ்நாடு

துணை முதல்வராக இருந்தபோது விட்ட அறிக்கை: முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி சீனிவாசன்!

Published

on

நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது விட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசினார்.

Vanathi

பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. டெல்டா பகுதியில் விவசாயம் எவ்வளவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் ஒரு ஏலம் வரும்போது உள்ளூரில் உள்ள வருவாய்த்துறையுடைய அனுமதி எல்லாம் தெரிவித்த பின்னர்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் வருவாய்த்துறை மற்றும் அந்த மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தது? ஏன் மத்திய அரசுக்கு முன்னரே தகவல் சொல்லவில்லை.

நிறையபேர் பேசும்போது கார்ப்பரேட்டுக்கு கொடுத்துவிடுவார்கள் அம்பானி, அதானி என்றெல்லாம் பேசினார்கள். 2011 ஜனவரி 4-ஆம் தேதி இன்றைய முதல்வர் அன்றைய துணை முதல்வராக இருந்தபோது 100 கோடி ரூபாய் முதலீட்டில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டோடு ஒரு ஒப்பந்தத்தை போட்டு 1500 பேருக்கு வேலை கிடைக்கும், 3600 கோடி ரூபாய் வணிகம் நடக்கும் என சொல்லி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை இன்றும் இருக்கிறது என்று பதில் அளித்தார் வானதி சீனிவாசன்.

மேலும் இந்த நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 3 டெல்டா பகுதிகளில் ஏலத்திற்கு அறிவித்ததை மாற்ற வேண்டும். இந்த அறிவிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது தொடர்பாக வலியுறுத்தவும் செய்வோம் என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version