தமிழ்நாடு

தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: மு.க.ஸ்டாலின் சூசகம்!

Published

on

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து அதிமுக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த ஆட்சியை கவிழ்க்க திமுக ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தேர்தல் வராமலேயே தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என சென்னையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள விருந்தினர் மாளிகை எதிரில் நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கடைசியாக கண்டன உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை, தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகின்றனர். ஏனெனில் 28-ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை சபாநாயகரை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத்தான் முதலில் நீக்க வேண்டும். அது விரைவில் நடைபெறவுள்ளது. அடுத்த தேர்தல் வந்துதான் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்றார். இது பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஜூலை 1-ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version