தமிழ்நாடு

இதயமில்லாத முதலமைச்சர்: ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Published

on

கஜா புயல் தமிழகத்தை தாக்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை விழாக்களில் பங்கெடுத்துவிட்டு இன்று தான் காலம் தாழ்த்தி புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்றுள்ளார். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் இருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. வரும் 20-ஆம் தேதி செல்கிறேன் என்றார்.

இந்நிலையில் சேலத்தில் விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவு, குடிக்க தண்ணீர், தங்க இடமில்லாமல் அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல் அல்லல்படும் வேளையில் முதல்வரின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரோம் நகரம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள். நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான். புயல் பாதித்து 72 மணி நேரத்தைக் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம்பாட்டத்தோடு வலம்வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்துக்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று தான் முதல்வர் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version