தமிழ்நாடு

“அவர மதுர பக்கம் வரச் சொல்லுங்கப்பா..!”- ஸ்டாலினை எச்சரித்த செல்லூர் ராஜூ

Published

on

ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை பக்கம் வந்து போட்டியிடச் சொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் பொதுக் கூட்டங்களில் பேசி வரும் ஸ்டாலின், ‘நான் செல்லும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிரான அலை அதிகமாக வீசுகிறது. மக்கள் அதிமுக மீதும், அதிமுக அரசு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்களின் தொகுதிகளில் தான் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. அமைச்சர்கள் மீது தான் மக்கள் அதிக அதிருப்தியில் இருக்கின்றனர்.

எனவே அதிமுக அமைச்சர்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவினர் போட்டியிடுவார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் அமைச்சர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களே களமிறக்கப் படுவார்கள்’ என்று அதிரடியாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள செல்லூர் ராஜூ, ‘தமிழகத்தில் மக்கள் அனைவரும் செழிப்பாக உள்ளார்கள். எப்போது தேர்தல் வரும், எப்போது இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தலாம் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் மனது இப்படி இருக்கையில் திமுக ஆட்சிக்கு வருவதைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

எங்கள் கட்சி அமைச்சர்களை எதிர்த்துத் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதைத் தான் நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். திமுக வேட்பாளர் கூட அல்ல, ஸ்டாலினே எங்களை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் சென்னைப் பக்கமே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தென் மாவட்டம் பக்கம் வர வேண்டும். குறிப்பாக மதுரை பக்கம் வர வேண்டும். அவரை நீங்களாவது மதுரை பக்கம் வந்து, இங்கிருக்கும் தொகுதிகளில் போட்டியிடும் படி சொல்லுங்கள்’ என்று பேசியுள்ளார்.

 

Trending

Exit mobile version