தமிழ்நாடு

அதிமுகவின் வாரிசு அரசியல் மட்டும் நியாயமா? எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில் கேள்வி!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாரிசு அரசியல் குறித்து பேசினார்.

திமுக இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாரிசு அரசியல் குறித்து பேசினார். திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்பதால் எடப்பாடி பழனிசாமி வாரிசு அரசியலில் திமுகவை ஒரு பிடிபிடித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வாரிசுதான் போட்டியிடுகிறார். மேலும் பல இடங்களிலும் வாரிசுகள்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, அவருக்குப் பிறகு நான் உங்கள் ஆதரவோடு முதல்வராகப் பணியாற்றுகிறேன். ஆனால், திமுகவில் அதுபோல முடியுமா? தற்போது ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி புறப்பட்டு விட்டார். திமுகவில் வேறு ஆட்களே இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்தை வாரிசு வேட்பாளர் என்று விமர்சனம் செய்கிறார் எடப்பாடி. மேலும், ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோரின் மகன்கள் தேர்தலில் நிற்கலாமா என்று கேட்கிறார். அவர்களிடம் நாங்கள் பதவியைத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. மக்களைச் சந்தித்து ஓட்டுவாங்கி பொறுப்புக்கு வருகிறார்கள். அவரைப் பார்த்துக் கேட்கிறேன், பன்னீர்செல்வம் மகன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன், ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் நின்றது மட்டும் நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.

seithichurul

Trending

Exit mobile version