தமிழ்நாடு

யோக்கியர் எதற்காக பயப்பட வேண்டும்? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விளாசிய ஸ்டாலின்!

Published

on

கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொடநாடு சம்பந்தப்பட்ட கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்வர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார். பேசுவதில் அவருக்கும் தெளிவில்லை. கேட்பவர்களுக்கும் தலைசுற்றுகிறது. என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதல்வர்.

கனகராஜ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள கனகராஜின் சகோதரர் தனபால், இதனை சிபிஐ விசாரித்தால் பழனிசாமி நிச்சயம் சிக்குவார் என பேட்டியளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாத முதல்வர், இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டுமென்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? அதுவும் இந்த நாட்டின் முதல்வர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது. சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான் அதனை திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்.

இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கண்டு பிடிப்புகளைச் செய்து, நாட்டு மக்களின் நகைப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு விசாரணையை அவர் எதிர்கொள்ளத் துணிய வேண்டும். எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு ஒரு முதல்வர் மிரட்டுகிறார். தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகின்றன. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? என ஸ்டாலின் தனது அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version