உலகம்

வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு அமெரிக்க நிறுவனம்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு..!

Published

on

தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

தினமும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் உலக அளவில் வேலை நீக்க அறிவிப்பை வெளியிடுகிறது என்பதும் இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Sprinklr என்ற நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் நான்கு சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியதாகவும் இந்த வாரம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் Sprinklr நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் Sprinklr நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் நிலையில் மிக அதிக அளவில் வேலை நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவுகளை எடுப்பது தங்களுக்கு மிகவும் கடினமானது என்றாலும் மாறிவரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனத்தின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட சரியான முடிவாக பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் ஊழியர்கள் மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் பணி செய்தார்கள் என்றும் அவர்களுடைய பங்களிப்புக்கு எங்களது நன்றிகள் என்றும் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி Sprinklr நிறுவனம் தனது வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து Sprinklr தனது அறிக்கையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதத்தின் இந்நிறுவனத்தில் உலக அளவில் மொத்தம் 3245 பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள் என்றும் இதில் இந்தியர்கள் மட்டும் 1800 பேர் என்றும், அமெரிக்கர்கள் 933 பேர் என்றும் தெரிகிறது. வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்தியர்களாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version