இந்தியா

அதானி, பாஜக குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

Published

on

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைந்து நேற்று பேசினார். இதற்கு பாஜக நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

#image_title

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் தற்போது 8-10 துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 2014-இல் வெறும் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தற்போது 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விமான போக்குவரத்து துறையில் அனுபவம் உள்ள ஒருவருக்கு மட்டுமே விமான நிலையங்களை மேம்படுத்தும் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற விதியை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றி 6 விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து ஜி.வி.கே நிறுவனத்திடம் இருந்து மிகவும் லாபகரமான விமான நிலையமான மும்பை விமான நிலையத்தை அபகரித்து அதானியிடம் கொடுத்துள்ளது மத்திய அரசு.

பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், அதானியுடன் எத்தனை முறை ஒன்றாக வெளிநாட்டு பயணம் செய்தீர்கள்? உங்கள் பயணத்தில் எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்து கொண்டார்? வெளிநாட்டில் எத்தனை முறை நீங்கள் சந்தித்துக் கொண்டீர்கள்? அதானி எத்தனை வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார்? கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என பல கேள்விகளை எழுப்பினார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்காக மாற்றப்பட்டது. அதானி குழுமம் டிரோன் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால் மோடி இஸ்ரேல் சென்ற உடனே அதானிக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா சென்ற உடன் எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் கடன் வழங்குகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பல கிடுக்குப்பிடி கேள்விகளை ஆவேசமாக எழுப்ப பாஜக எம்பிக்கள் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவித ஆதாரமும் இன்றி உண்மைக்கு புறம்பாக கூறிய தவறான குற்றச்சாட்டுகள். எனவே ராகுல் காந்தி பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version