தமிழ்நாடு

“நமக்குள்ள இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனப்பா”- சசிகலாவுக்கு சிக்னல் கொடுத்த அமைச்சர் வேலுமணி; அதிர்ச்சியில் எடப்பாடி!

Published

on

சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, ‘அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை புரட்சித் தலைவியின் ஆசி கொண்டு வெற்றி பெறுவோம்.

இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்து விடக் கூடாது. நமது பொது எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

இதய தெய்வம் புரட்சித் தலைவியின் பிள்ளைகள் என்றும் எனக்கும் பிள்ளைகள் தான். புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு செயல்படடுவதே என் விருப்பம். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது’ என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திப் பேசியுள்ளார். அதாவது அதிமுகவுக்குள் குழப்பங்கள் வேண்டாம், பொது எதிரியான திமுகவை வீழ்த்துவோம் என்கிற அறைகூவலையே அவர் விடுத்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அமைச்சர் வேலுமணி, ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்த பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனையாகும். அண்ணன், தம்பிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், ஆனால் வெளியில் இருந்து பிரச்சனை வரும் போது ஒன்று சேர்ந்து அதை எதிர்கொள்ள வேண்டும். நமக்கு வெளியில் இருக்கும் எதிரி தான் திமுக.

இன்றைக்குத் திமுகவின் ஸ்டாலின், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டித் திரிகிறார். இன்று நமக்கு இருக்கும் மரியாதை, அந்தஸ்து என அனைத்தும் வரும் தேர்தலில் சரியாக பணியாற்ற வில்லை என்றால், காணாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version