இந்தியா

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி: மீண்டும் தீவிர அரசியலில்!

Published

on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது தேசிய அளவில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை மிகவும் சோர்வடைய வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெறும் 52 இடங்களில் தான் வென்றது. ஆனால் பாஜக தனித்து 303 இடங்களில் வென்றது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் காரிய கமிட்டி ராகுலின் ராஜினாமா கடிதத்தை இன்னமும் ஏற்கவில்லை. இருந்தாலும் ராகுல் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாகவும் யாரிடமும் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டம் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தலைவராக சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதனையடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் சோனியாகாந்தியை காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக தனது தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் கொடுத்த சோனியா காந்தி சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்துவந்தார். இந்நிலையில் அவர் தற்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸுக்கு வாக்களித்த 12.13 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version