உலகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

Published

on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72 ஆகும். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த யெச்சூரி, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புண்யாவதி, பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம், யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிவித்தார்.

செப்டம்பர் 10-ம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், யெச்சூரி கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், யெச்சூரியை தனது “நண்பர்” எனக் குறிப்பிடும் பதிவில், “இந்தியாவின் கருத்துரிமையின் பாதுகாவலர்” என்றும், “நாட்டை பற்றிய ஆழமான புரிதலுடையவர்” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கே ஒரு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஃப்.ஐ-யின் மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ, “அன்புக்குரியவரும், எஸ்.எஃப்.ஐ-யின் முன்னாள் தலைவருமான யெச்சூரியின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, எங்கள் அமைப்பின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.

யெச்சூரியின் அரசியல் பயணம்

32 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி, 2015 ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். 2005 முதல் 2015 வரை மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தார்.

 

Poovizhi

Trending

Exit mobile version