சினிமா

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்!

Published

on

பயந்தாங்கோலி போலீஸ், வில்லன்களை பாய்ந்து அடித்தாரா இல்லை மான் கராத்தே செய்து தப்பித்தாரா என்பதே சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ஒன்லைன் மற்றும் முழுக் கதையும்.

பல தயாரிப்பாளர்கள் காசு கொடுக்காமல் ஏமாற்றியதால் தானே தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா கசாண்ட்ரா, ஓவியா, யோகி பாபு, கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி எண்டர்டெயினர் படம் தான் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதையாசிரியர் செல்லா அய்யாவு, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

புஷ்பா புருஷன் மற்றும் அன்னைக்கு காலைல 6 மணிக்கு போன்ற ரிபீட் வசனங்களை கலக்கல் காமெடியாக வொர்க்கவுட் செய்த இவர், இந்த படத்தையும் முழு நீள காமெடி படமாகவே எடுத்துள்ளார்.

இந்த வாரம் மோதும் பல படங்களில் காமெடிக்காக மட்டும் போய் பார்க்க வேண்டுமென்றால், தாரளமாக இந்த படத்தை நகைச்சுவை விரும்பிகள் தேர்வு செய்யலாம்.

படத்தின் கதை:

பயந்தாங்கோலி கான்ஸ்டபிள் சக்தியாக வரும் விஷ்ணு, அத்தை மகள் என்ற அடையாளம் தெரியாமல் துரத்தி துரத்தி ரெஜினா கசாண்ட்ராவை காதலிக்கிறார். தான் ஒரு பயந்தாங்கோலி என்பதால், பெரிய கேஸ்களை எடுக்காமல், சிம்பிளான பெட்டி கேஸ்களை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவரிடம், சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொல்ல வரும் சைக்கிள் சங்கரை (சாய் ரவி) எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை காரணமாக கைது செய்து சக்தி உள்ளே தள்ளுகிறார்.

பின்னர், சைக்கிள் சங்கரின் கதை அறிந்த சக்தி தலைமறைவாக பல வேசங்களை போட்டு தப்பிக்கிறார். சக்தியை எப்படியாவது கொன்றே தீர வேண்டும் என்ற வெறியில் அலையும் சைக்கிள் சங்கர் இறுதியில் சக்தியை பிடித்தாரா இல்லை சக்தியின் பயம் போய் கிளைமேக்ஸில் ரியல் ஹீரோவாக மாறுகிறாரா என்பதே சிலுக்குவார் பட்டி சிங்கத்தின் கதை.

இதற்கிடையே யோகி பாபுவின் ஒன்லைன் காமெடிகள், ஓவியாவின் 2 குத்தாட்டங்கள், ரெஜினா கசாண்ட்ராவின் காதல், கவர்ச்சி பாடல்கள், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், கருணாகரன் செய்யும் கலாட்டாக்கள் என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறது இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

இந்த படத்தில் மைனஸ் என்று பார்த்தால் பல லாஜிக் ஓட்டைகள் உள்ளன. ஆனால், ஒரு காமெடி படத்தில் அதெல்லாம் பார்க்கக் கூடாது என்று தமிழ் சினிமாவின் பல படங்கள் திரும்ப திரும்ப கூறிவிட்டதால், ஜாலியா என்ஜாய் பண்ண சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தை தாராளமாய் தியேட்டரில் போய் பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version