இந்தியா

ஓடிபி இல்லை, செல்போன் ஹேக் இல்லை.. ஆனால் கோடிக்கணக்கில் மாயமாகும் பணம்: அதிர்ச்சி தகவல்

Published

on

ஆன்லைன் மூலம் நெட்பேங்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்ற நிலையில், ஓடிபி இல்லாமலேயே புதிய தொழில்நுட்பம் மூலம் ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வரும் தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காவல் துறையினர் நவீன தொழில்நுட்பம் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க முயற்சிக்கும் நிலையில் அதைவிட புத்திசாலித்தனமாக சைபர் குற்றவாளிகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை திருட முயற்சிக்கும் தந்திரங்களை செய்து கொண்டு வருகின்றார்கள்.

பொதுவாக வங்கி கணக்கில் இருந்து ஒரு நபருக்கு நெட்பேங்கிங் முலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒரு சில தொழிலதிபர்கள் வங்கி கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் ஓடிபி இல்லாமலேயே பணம் பரிமாறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது தனக்கு தெரியாமல் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் இது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெட் பேங்க் பரிவர்த்தனையில் ஓடிபி பெறாமல் பணம் அனுப்ப முடியாது என்ற நிலை இருக்கும்போது எவ்வாறு ஓடிபி இல்லாமல் பணம் பரிமாற்றம் ஆகிறது என்பது குறித்து இன்னும் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகார் அளிக்கப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் உள்ள நெட் பேங்கிங் கணக்குகளில் பெயர் தெரியாத பயனாளிகள் சேர்க்கப்பட்டதாகவும் அதற்கு கூட ஓடிபி வரவில்லை என்றும், அவ்வாறு பயனாளிகள் சேர்க்கப்பட்ட பின் மிகப்பெரிய தொகைகள் அந்த வங்கி கணக்குகளுக்கு பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குஜராத் மாநிலத்தில் சில தொழில் அதிபர்கள் புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நெட் பேங்கிங் சாப்ட்வேரில் ஏதோ தவறு இருக்கிறது என்றும் அதில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஓடிபி பெறாமல், வாடிக்கையாளரின் செல்போனை ஹேக் செய்யாமல் இந்த திருட்டு எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்குள் பல தொழில் அதிபர்களின் வங்கி கணக்கிலிருந்து ஏராளமான பணம் மோசடியாக பரிவர்த்தனை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹேக்கர்களிடமிருந்து உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

நீங்கள் நெட்பேங்கிங் வசதி வைத்திருந்தால் பயனாளிகளின் பட்டியலை அவ்வப்போது சரிபார்க்கவும். நீங்கள் அறியப்படாத பயனாளியைக் கண்டால், அவர்களை அகற்றிவிட்டு, வங்கி அல்லது காவல்துறையைத் தொடர்புகொள்ளவும்.

வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பயன்படுத்தாத பயனாளிகளை நீக்குவதை எப்போதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பொது கணினிகள் அல்லது சைபர் கஃபே ஆகியவற்றில் நெட்பேங்கிங் செய்ய வேண்டாம். பொது வைஃபையையும் பயன்படுத்த வேண்டாம். இவை பாதுகாப்பானவை அல்ல, உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு விவரங்கள் திருடப்படலாம்.

ஒவ்வொரு 14 நாட்களுக்கும் உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு சிறப்பு எழுத்துகளுடன் எப்போதும் சீரற்ற எண்ணெழுத்து கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். கடவுச்சொல்லை எங்கும் எழுத வேண்டாம், அதற்கு பதிலாக அதை மனப்பாடம் செய்ய முயற்சிக்கவும்.

seithichurul

Trending

Exit mobile version