கிரிக்கெட்

‘என்னடா ஸ்கூல் பசங்க மாதிரி விளையாட்றீங்க!’- பாக். அணியை கிழித்து தொங்கவிட்ட அக்தர்

Published

on

பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நியூசிலாந்தில் நடந்து வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 297 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து, 659 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

3வது நாள் அன்று 11 ஓவர்கள் விளையாடிய பாகிஸ்தான், 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கைட்டை இழந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் போட்டி பாக்கியுள்ளதால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, எப்படியும் தொடரைக் கைப்பற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடந்த இருபது ஓவர் தொடரிலும் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் 2-1 என்ற ரீதியில் தோல்வி கண்டது. தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்டிலும் ஒயிட்-வாஷ் ஆகும் நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி, சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இதனால் கொதிப்படைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தொடர்ச்சியாக சாதாரண கிரிக்கெட் வீரர்களையே கொண்டு வருகிறது. இதனால் சுமாரான அணியே நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் சுமாரான முடிவுகள் மட்டும் கிரிக்கெட் களத்திலும் கிடைக்கின்றன.

பாகிஸ்தான் எப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் இப்படித்தான் அவர்கள் அம்பலப்பட்டு போய் விடுகிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தேசிய அணி விளையாடுவது பள்ளிக்கூட நிலையிலான கிரிக்கெட் தரம்தான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் தான், வீரர்களை பள்ளிக்கூட அளவிலான அணியைப் போல மாற்றி வைத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அணி நிர்வாகத்தை மாற்றுவது குறித்து மீண்டும் யோசித்து வருகிறது. நிர்வாகத்தை மாற்றுவது சரி தான், எப்போது அணிக்கான அணுகுமுறையை கிரிக்கெட் வாரியம் மாற்றும்’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சாடியுள்ளார் அக்தர்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் அக்தர், பாகிஸ்தான் அணியை சாடி வரும் நிலையில், இந்திய அணியையும் அதன் வீரர்களையும் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்.

 

 

 

 

 

Trending

Exit mobile version