தமிழ்நாடு

சென்னையில் 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தும் பணி.. முக்கிய கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

Published

on

சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைப்பதற்காக சென்னையில் உள்ள முக்கிய ஏழு சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சாலை, எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, புதிய ஆவடி சாலை, வில்லேஜ் சாலை, உள்பட 7 சாலைகளை அகலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சாலை அகலப்படுத்துவதற்கான ஆய்வு பணியை தொடங்கி உள்ளதாகவும் இந்த 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை அண்ணாசாலை முதல் மத்திய கைலாஷ் வரை உள்ள சர்தார் வல்லபாய் படேல் சாலை தற்போது 20 மீட்டராக இருக்கும் நிலையில் அதை 30 மீட்டராக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை ஆய்வு இன்னும் ஓரிரு நாளில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு எத்திராஜ் சாலையை அகலப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலை சந்திப்பில் இருந்து கூவம் வரை எத்திராஜ் சாலை 18 மீட்டர் அகலமாக விரிவுபடுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வில்லேஜ் சாலையை 27 மீட்டராக அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை தற்போது 18 மீட்டராக இருக்கும் நிலையில் அந்த சாலையை 24 மீட்டராக அகலப்படுத்த உள்ளதாகவும் வில்லேஜ் சாலையை 27 மீட்டராக அகலப்படுத்த உள்ளதாகவும் நெல்சன் மாணிக்கம் சாலை ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை 18 மீட்டர் சாலையாக அகலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் புதிய ஆவடி சாலை, பெரியார் சாலை ஆகியவை 18 மீட்டராக அகலப்படுத்தப்படும் என்றும் பேப்பர் மில் சாலை 18 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏழு சாலைகளை அகலப்படுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டால் பெரும்பாலும் தனியார் நிலங்கள் கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ஏழு முக்கிய சாலைகளை அகலப்படுத்தப்பட்டால் பழமையான கட்டிடங்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version