தமிழ்நாடு

ஒருவழியாக திமுகவில் இணைந்துவிட்டார் செந்தில் பாலாஜி!

Published

on

முன்னாள் அமைச்சரும் அமமுக மாநில அமைப்புச்செயலாளரும், கரூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி ஒரு வழியாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார்.

அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்க வழக்கிற்கு பின்னர் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் அவர். இதனால் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக சில தினங்களாக தகவல் பரவி வந்தது. ஆனால் இதனை தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அமமுக மற்ற தலைவர்கள் மறுத்து வந்தனர். ஆனால் செந்தில் பாலாஜி இது தொடர்பாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன் செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் போலி என விமர்சித்திருந்தார். இதனையடுத்து நேற்று இரவே தனது ஆதரவாளர்களுடன் சென்னை கிளம்பிய செந்தில் பாலாஜி இன்று மதியம் 12 மணிக்கு அறிவாலயத்துக்கு வந்தார். அவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, நன்னியூர் ராஜேந்திரன், பூச்சி முருகன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து, உறுப்பினர் அட்டையில் கையெழுத்திட்டு தன்னை முறைப்படி திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த இணைப்பு விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டிஆர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்தது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி ஏற்கனவே திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து பின்னர் தினகரன் ஆதரவாளராக அமமுகவில் இருந்து தற்போது மீண்டும் திமுகவிற்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version