தமிழ்நாடு

திமுகவை வெறுப்பேற்ற செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை!

Published

on

தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை கோபமடைய வைத்துள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய கதை, ஒரு பெண்ணிற்கு நீண்ட நாட்களாக ஜோதிடர்காள் மூலம் வரன் பார்த்தார்கள். கடைசியில் அந்த பெண்ணின் அப்பாவிடம் வந்த புரோகிதர் ஒருவர், உங்கள் மகளுக்காக கஷ்டப்பட்டு ஒரு ஜாதகம் எடுத்து வந்துள்ளேன். அதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் 8 பொருத்தங்கள் சரியாக உள்ளது. 2 மட்டுமே சரியில்லை என்றார். அதற்கு பெண்ணின் தந்தை நான் ஏற்கனவே நொந்து போயிருகிறேன். இந்த வரனையே முடித்துவிடுவோம் என்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

திருமணத்தின் போது மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனிடம் புரோகிதர் பொறியைக் கொடுத்து போடச் சொன்னார். அவனோ அந்த பொறியை தன் வாயில் போட்டுக்கொண்டான். இதனால் கோபமடைந்த புரோகிதர், மணமகனிடன் பொறியை யாக குண்டத்தில் போட வேண்டும் என்றார். உடனே மணமகன் தன் வாயிலிருந்த பொறியை யாக குண்டத்தில் துப்பினான். இதனால் மீண்டும் கோபமடைந்த புரோகிதர் முகூர்த்த நேரம் வந்தவுடன் தாலியை எடுத்துக் கட்டச் சொன்னார். உடனே மணமகன், நான் எது பண்ணாலும் உனக்கு தப்பாவே படுது. தாலி கட்டுனாலும் ஏன் இப்படி கட்டுன, ஏன் அப்படி கட்டுனனு ஏதாவது சொல்லுவ. அதனால் இந்த வேலையே வேணாம். நீயே கட்டு என்று கூறினார்.

இதனால் பதறிப்போன பெண்ணின் தந்தையிடம் புரோகிதர், நான் அப்பவே அவனுக்கு இரண்டு பொருத்தங்கள் இல்லை என்று கூறினேன். ஒன்று சொல்புத்தி, மற்றொன்று சுயபுத்தி என்றார். இதனையடுத்து திருமணத்தையே நிறுத்திவிட்டார் மணமகளின் தந்தை. அதுபோலவே மணமேடை இருக்கும், மணமகள் இருப்பார். ஆனால் சிலருக்கு மட்டும் கல்யாணமே நடக்காது.

அதாவது சிலர் அடுத்து நாங்கள்தான் நாங்கள்தான் என்பார்கள். ஆனால் அது நடக்கவே நடக்காது என திமுகவை மறைமுகமாக தனது குட்டிக்கதை மூலம் விமர்சித்தார் செல்லூர் ராஜு. இதற்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ஜாதகம் உங்களுக்குத்தான் பார்த்தோம். 10 பொருத்தமும் சரியாக இருந்தால், அந்தத் திருமணம் ஈடேறாது. அப்படியிருந்தால் குடும்பத்திலிருக்கும் ஒருவர் இறந்துவிடுவாராம் என்றார்.

இதனையடுத்து துரைமுருகனுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் நன்றாக ஆட்சியில் இருக்கிறோம். திமுகவுக்கு ஜாதகம் சரியில்லாத காரணத்தால்தான் மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version