சினிமா

சீதக்காதி விமர்சனம்!

Published

on

ஒரு மகா நடிகனுக்கு இறப்பே இல்லை என்பதை மையமாக வைத்து சீதக்காதி படம் எடுக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் 25வது படம் என்றாலும், இது ஒரு சோதனை முயற்சி படம் என்றும், சினிமா ரசனை மிக்க கூட்டத்தின் பொக்கிஷமாகவும் பார்க்கப்படுகின்றது.

சீதக்காதி படம் நாளை தான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. முன்னதாக பத்திரிகையாளர்கள் காட்சி போடப்பட்ட நிலையில், இதன் விமர்சனங்கள் வரத் தொடங்கி விட்டன.

டிசம்பர் 21ம் தேதி 5 பெரிய நடிகர்களின் படங்கள் போட்டியிடுகின்றன. அதற்கு ஒரு நாள் முன்னமே விஜய்சேதுபதியின் சீதக்காதி படம் 20ம் தேதியே திரைக்கு வருகிறது.

80 வயது முதியவராக அய்யா ஆதிமூலம் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி வாழ்ந்துள்ளார். ஆனால், இந்த படம் முழுக்க விஜய்சேதுபதி வரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையக் கூடும்.

முதல் அரை மணி நேரம் மட்டுமே விஜய்சேதுபதி படத்தில் வருகிறார். ஆனால், இறுதி வரை அய்யா ஆதிமூலம் படத்தில் தொடர்கிறார். அந்த மேஜிக் எப்படி என்பதை திரையில் காணுங்கள்.

நாடக நடிகராக வாழ்வை தொடங்கும் அய்யா ஆதிமூலம், திரைப்பட வாய்ப்புகள் வந்த பின்னரும், நாடகத்தில் மட்டுமே நடிப்பேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து, இறுதியாக அவுரங்கசிப் நாடகத்தில் 10 நிமிட சிங்கிள் டேக் காட்சியில் நடித்த பின்னர் இறந்து விடுகிறார்.

பின்னர், அவரது நடிப்பு எப்படி படம் முழுவதும் தொடர்கிறது என்பதை சிந்தித்த இடத்தில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் கிளாப்ஸ் அள்ளுகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியை தாண்டி மேலும், இரண்டு ஹீரோக்கள் உள்ளனர். ராஜ்குமார் மற்றும் சுனில், படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

நாடக கலைஞரான ராஜ்குமாரை மெளலி சினிமாவுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சிறு சிறு படங்களில் நடித்து மாபெரும் ஹீரோவாக ராஜ்குமார் மாறுகிறார். ராஜ்குமாருக்கு அய்யா ஆதிமூலம் எப்படி உதவுகிறார் என்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை நாங்கள் போட்டுடைக்க விரும்பவில்லை.

அவர் செய்யும் காமெடி சீரியஸாக தொடங்கும் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மோடுக்கு இட்டுச் செல்கிறது. அடுத்ததாக வரும் இன்னொரு கதையின் நாயகன் சுனிலும் நடிப்பால் மிரட்டுகிறார்.

இந்த பல முனை போட்டிகளுக்கு நடுவே இப்படியொரு சோதனை முயற்சியை மக்களை நம்பி எடுத்துள்ளனர். ஆனால், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை, நாடகங்களை பற்றி பேசுவதால், பல காட்சிகள் நிஜ நாடக காட்சிகளாகவே நகர்வதால், அவை சாமானிய ரசிகர்களை எந்தளவுக்கு திருப்தி படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.

இந்த வார இறுதியில் இதற்கான விடை கிடைத்துவிடும். மேலும், இந்த குதிரைப் பந்தயத்தில் வெல்லும் குதிரைக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மவுசு ஏற்படும் என்பது துளியும் சந்தேகம் கொள்ளக்கூடாத ஒரு விசயம்.

நல்ல சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு சீதக்காதி நிறைவை தருவார். கமர்ஷியல் சினிமா விரும்பிகளுக்கு, சீதக்காதி செட்டாகமாட்டார்.

சீதக்காதி ரேட்டிங்: 3.25/5.

seithichurul

Trending

Exit mobile version