தமிழ்நாடு

சசிகலாவை ‘ஏ2 குற்றவாளி’ என விமர்சித்த சீமானின் பேச்சு; வைரலாகும் வீடியோ!

Published

on

நேற்று, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மிக முக்கியமானது, சசிகலா – சீமான் சந்திப்பு. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான், அதிமுக, ஜெயலலிதா மற்றும் சசிகலாவை தொடர்ந்து மேடைகளில் விமர்சித்து வருபவர்.

இந்நிலையில் அவர் சசிகலாவை நேரில் சென்று பார்த்தது குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர் வரும் தேர்தலில் அவர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி மேடையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா பெற்ற தீர்ப்பு குறித்து ஆவேசமாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

அதிகமாக பகிரப்பட்டு வரும் காணொலியில் சீமான், ‘அதிமுகவினர் இன்றும் ஜெயலலிதாவின் படத்தைப் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டு சுற்றி வருகின்றனர். ஆனால், அவரைத் தான் உச்ச நீதிமன்றம் ஏ1 குற்றவாளி எனத் தீர்ப்பு எழுதிவிட்டது. திட்டமிட்ட கொள்ளைக்காரி என்று ஜெயலலிதாவை விமர்சித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அதேபோல சசிகலாவின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்திருந்ததே திட்டமிட்டுக் கொள்ளையடிக்கத் தான் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இது பற்றி ஒருவரும் பேச முன் வருவதில்லை’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று சசிகலாவுக்கு அருகில் பவ்யமாக உட்கார்ந்திருக்கும் சீமானின் புகைப்படமும், இந்த காணொலிக் காட்சியும் ஒரு சேரப் பகிரப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version