தமிழ்நாடு

பிரேமலதாவை தொடர்ந்து சீமானும் சசிகலாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு… அதிர்ச்சியில் எடப்பாடி & கோ!

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, நாளை தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும், அவருக்கு வரவேற்பு கொடுக்க அதிமுகவின் ஒரு பகுதியும், அவரது ஆதரவாளர்களும் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.

ஒரு பக்கம் அதிமுக நிர்வாகிகள் பலர், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் நிலையில், அவர் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்துக்கோ, அவரின் நினைவிடத்துக்கோ சென்று விடாமல் இருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தையும், வேதா இல்லத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது அரசு. அதைப் போலவே சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் பலத்தப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இப்படி சசிகலா வருகையால் அதிமுக ஆட்டம் கண்டுள்ளது.

‘சசிகலா எங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அவரை நாங்கள் எக்காரணம் கொண்டு அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டோம்’ என்று தமிழக அமைச்சர்களும், முதல்வர் பழனிசாமியும் சொல்லி வந்தாலும், பலரும் பதற்றத்தில் இருப்பது தெரிகிறது.

இப்படி கட்சிக்குள்ளேயே சசிகலாவுக்கு ஆதரவுக் குரல்களும், உறுதியற்ற எதிர்ப்பும் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவுக்கு வெளியேயும் சசிகலாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக, சசிகலாவின் அரசியல் வருகையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியுள்ளது. அக்கட்சியின் பிரேமலதா, ‘நான் சசிகலாவின் வருகையை எதிர்நோக்கித் தான் காத்திருக்கிறேன். ஒரு பெண்ணாக அவர் மீண்டும் தமிழக அரசியலில் களமாட வேண்டும் என விருப்பம் கொள்கிறேன்’ என்று எடப்பாடி தரப்பை அப்செட் செய்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் இருப்பது உட்கட்சிப் பூசல். அதே நேரத்தில் அவரின் வருகையை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். அவர் உடல் நலத்தோடு இருக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்து கருத்து கூறி வருவது எடப்பாடி தரப்பை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version