தமிழ்நாடு

“எல்லையில் வீரர்களிடம் துப்பாக்கி இருக்கு, தோட்டா இல்ல”- ‘ராணுவ ரகசியத்தை’ போறபோக்கில் போட்டுடைத்த சீமான்

Published

on

எல்லையில் பாதுகாப்புக்காக இருக்கும் இந்திய ராணுவ வீரர்களிடம் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தோட்டாக்கள் அதில் இருக்காது என்று பகீர் கிளப்பும் தகவலைத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் எதன் அடிப்படையில் இப்படியான கருத்தை தெரிவித்து வருகிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சீமான், மேடைகளில் உரையாற்றும் போது உணர்ச்சிக் கொந்தளிப்பில் அதீத தகவல்களை சொல்வதும், மிகைப்படுத்திப் பேசுவதும் வழக்கம் தான். அந்த வகையில் அவருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் இருந்த உறவு குறித்து மேடைகளில் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், ‘எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் நம்ப ஊர் ராணுவ வீரர்களின் கழுத்தை பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு வீரர்கள், அறுத்துக் கொலை செய்கிறார்கள். கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் வரை ஏன் நம் நாட்டு வீரர்கள் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. கையில் தான் துப்பாக்கி கொடுக்கப்பட்டு உள்ளதே, அதை வைத்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாமே?

அப்படி செய்ய முடியாததற்குக் காரணம், நம் வீரர்களிடம் துப்பாக்கி மட்டும் தான் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தோட்டாக்கள் இருக்காது.

இது எப்படி எனக்குத் தெரியும் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் பாதி பேர் நம் கட்சிக் காரர்கள் தான். அவர்கள் சொல்லித் தான் எனக்கு இந்தத் தகவல் தெரிந்தது. நாம் ராணுவத்தை விமர்சிக்கும் நோக்கில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சொல்லத் தான் இதைப் பற்றிப் பேசுகிறோம்’ எனக் கூறியுள்ளார் சீமான்.

இந்திய ராணுவம் பற்றியும், அதில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் சீமானுக்கு இவ்வளவு வெளிப்படையாக தகவல் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை சீமான் சொல்வது மெய்யாக இருக்கும் பட்சத்தில், அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் உண்மை.

seithichurul

Trending

Exit mobile version