தமிழ்நாடு

தமிழக டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு- திமுக அரசின் நடவடிக்கையை புகழ்ந்து தள்ளிய சீமான்

Published

on

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பு ஏற்றது. அதைத் தொடர்ந்து பல துறைகளுக்கும் பதவி வகித்து வந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக சென்னைக்கு பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் ஆணையர் ககன்தீப் சிங் பேடி மீண்டும் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

அதைப் போலவே பொது மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றவரும், நல்ல அனுபவம் வாய்ந்தவருமான இறையன்புவை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின். இப்படி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெறும் வகையில் அடுத்தடுத்து அதிகாரிகள் நியமனம் இருந்த வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை கட்டிக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் காவல் துறைக்கு டி.ஜி.பி-யாக யாரை நியமனம் செய்வது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் சைலேந்திர பாபு, அந்தப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சீமான், ‘தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன்.

அவரது பணிகள் சிறக்கவும், சட்டம் ஒழுங்கைச் சிறப்பான முறையில் பேணிகாத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்’ என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version