தமிழ்நாடு

“சீமான் சொல்றதுல எந்த உண்மையும் இல்ல..!”- திமுகவில் இணைந்த பின்னர் சீறிய ராஜீவ் காந்தி

Published

on

நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நேற்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த ராஜீவ் காந்தி, தமிழ்த் தேசிய கருத்தியலைக் கொண்டவர். அவர் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திராவிடக் கட்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, சீமானுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் ராஜீவ். தன் விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் எந்த வித விளக்கங்களையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் திமுகவில் இணைந்த அவர், சீமானுக்கு எதிராக பேசியுள்ளார்.

தமிழ்த்தேசிய கோட்பாடுடைய கட்சியில் இருந்துவிட்டு, தற்போது திராவிட சித்தாந்தத்தை மையமாக கொண்ட திமுகவில் இணைந்தது குறித்து ராஜீவ் காந்தி, ‘தமிழகத்தில் தமிழ்த் தேசியத்துக்கான விதையைப் போட்டது திராவிட இயக்கங்கள் தான். எந்த திராவிட இயக்கங்களும் இந்தியை ஆதரிக்கவில்லை. தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் செயல்படவில்லை. தமிழ்த் தேசியத்தின் நீட்சியாகவே திராவிட இயக்கங்களும் திமுகவும் உள்ளன’ என்றார்.

தமிழீழ இனப் படுகொலையில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் பங்கு உள்ளது என்று தொடர்ந்து மேடைகளில் ஆவேசமாக உரையாற்றி வந்தவர் ராஜீவ் காந்தி. அப்படி இருக்கும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எப்படி பயணிப்பார் என்பது குறித்து, ‘என் பெயர் ராஜீவ் காந்தியாக இருக்கலாம். ஆனால், நான் காங்கிரஸில் சேரவில்லை. நான் இணைந்தது திமுகவில். திமுக மீது, ஈழ இனப் படுகொலை தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் இருப்பது உண்மை தான். அதே நேரத்தில் தமிழீழம் அமைய வேண்டும் என்பதற்கு எதிராக திமுக என்றும் நிலைப்பாடு எடுத்ததில்லை. இலங்கையில் நடந்த இனப் படுகொலையை உலகம் முழுக்க எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், ஒரு வலுவான அமைப்பின் மூலம் தான் அதைச் செய்ய முடியும். அதை திமுகவிலிருந்து செய்யலாம் என்று நம்புகிறேன். மற்றபடி காங்கிரஸின் கோட்பாடு மற்றும் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து ராஜிவ் காந்தி வெளியேறிய போது சீமான், ‘ராஜீவ் காந்தி தன்னை வளர்த்துக் கொள்ளத் தான் கட்சியில் இருந்தார்’ என்கிற குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு ராஜீவ், ‘திமுகவில் இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சியை குறை சொல்வதை நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சீமான் சொல்வதில் உண்மை இல்லை’ என்று முடித்துக் கொண்டார்.

 

Trending

Exit mobile version