தமிழ்நாடு

பிரஸ் மீட்டில் நடிகர் விஜய்க்கு எதிராக பேசினாரா சீமான்..? – அரசியல் பரபர

Published

on

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார்.

பத்திரிகையாளர்கள், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து எழுப்பிய கேள்விக்கு சீமான், ‘தமிழ்நாட்டில் தமிழர்களை ஆள்வதற்கு ஒருவன் கூட இல்லையா. இங்கு தகுதி படைத்த எத்தனையோ பேர் இருக்கும் நிலையில் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த ரஜினிகாந்த் எதற்காக. இது என் நிலம், என் உரிமை. ரஜினிகாந்தை முன்னிறுத்தி அரசியல் பேசுவதை ஒரு அவமானமாக நினைக்கிறேன். இந்த நாட்டு மக்களை அவர் எவ்வளவு இழிவாக நினைத்திருக்கிறார் என்பதுதான் ரஜினியின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது. நேரடியாக தேர்தலுக்கு மட்டுமே வருவேன் என்று ரஜினி சொல்வது ஒரு வெட்கக்கேடு.

இந்த நிலத்தில் மக்களை சந்திக்காமல், அரசியல் செய்யாமல், அரசியல் களத்தில் நிற்காமல் நேரடியாக தேர்தலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்வதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தன்மானம் உள்ள எந்தத் தமிழனாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு விழும் அடி என்பது, இனி எந்த நடிகனும் தமிழக அரசியலுக்கு வர அச்சப்படும் வகையில் இருக்க வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார்.

அதற்கு ஒரு நிருபர், ‘அனைத்து நடிகர்கள் என்றால், அதில் விஜய்யும் அடக்கமா?’ என்று கேட்டார். ‘அனைவரையும் சேர்த்துதான் சொல்கிறேன். நீயும் சினிமா துறையில் இருந்து வந்தவன்தானே என்று நீங்கள் கேட்கலாம். நான் சினிமாவிலிருந்து வந்தாலும், எனது ரசிகர்களை நம்பி, அவர்கள் ஆதரவில் கட்சி ஆரம்பித்தவன் அல்ல. நான் மக்களை சந்தித்தேன். அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடினேன். அவர்கள் நன்மதிப்பைப் பெற்று கட்சி ஆரம்பித்தேன். வெறும் சினிமா கவர்ச்சியை வைத்து இனியும் தமிழகத்தில் யாரும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கக் கூடாது. இந்த காரணத்தினால்தான் ரஜினியின் அரசியல் வருகையை நாங்கள் எதிர்க்கிறோம். தொடர்ந்து எதிர்ப்போம்’ என்றார்.

பொதுவாக விஜய்க்கு தார்மீக ரீதியில் ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்தவர் சீமான். ஆனால், தற்போது அவருக்கு எதிராக சீறியுள்ளது பலரை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. விஜய்க்கு எதிராக சீமான் பேசியது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version