தமிழ்நாடு

இஸ்லாமியர் என்பதாலே ஷாருக்கானின் மகனை குறிவைப்பதா? சீமான் கண்டனம்!

Published

on

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக்கான் மகன் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல் நடந்திருப்பதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாகவும் இஸ்லாமியர் என்பதால் அவரை குறிவைத்து அரசு அதிகாரம் காய்களை நகர்த்தி வருவதாகவும் அது மட்டுமின்றி 25 கோடி வரை அவரை விடுவிக்க பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரியன்கானை ஜாமினில் விடுவிப்பதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள், போதை பொருள் பயன்படுத்தும் நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாருக்கான் மகன் என்பதாலேயே ஆரியன்கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3000 கிலோ எடையுள்ள 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத பாஜக அரசு ஆர்யன்கான் வழக்கில் மட்டும் தீவிர ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் சீமான் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பின்புலத்தில் பெரும்புள்ளிகள் பலர் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை பாயாத நிலையில் ஆரியன்கானுக்க்8உ எதிராக மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற மகத்தான கோட்பாட்டினை குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிரித்து மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது என்றும் பாஜக அரசின் இந்த கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானை பாஜகவின் ‘பி’டீம் என திமுகவினர் உள்பட ஒருசிலர் கூறி வரும் நிலையில் மோடி அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version