தமிழ்நாடு

“அட்மிட் ஆனப்றோம் சசிகலாவ பாக்கவே இல்ல; என்ன நடக்குதுனே தெரியல!”- நெருங்கிய உறவினர் ஜெய் ஆனந்த் கதறல்

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சற்று சீரடைந்து இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜெய் ஆனந்த் சசிகலாவின் உடல்நிலை குறித்துக் கூறும் போது, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து 12 மணி நேரம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இதுவரை அவரை நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவருக்கு யார் மருத்துவம் செய்து வருகிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி, மேல் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றாலும், யாரும் சரி வர தகவல்களை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் இதுவரை செவி வழிச் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. முறையான தகவல்கள் வரவில்லை’ என்று விரக்தி மன நிலையில் தெரிவித்தார்.

சசிகலாவின் உயிருக்கு சில தரப்புகளால் ஆபத்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அவருக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், சரியாக சிகிச்சை அளிக்கப்படாததும் மிகுந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

வரும் 27 ஆம் தேதி சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இருக்கிறார். அன்று அவரது ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அவர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவனையில் படுத்த படுக்கையாக இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுக்கு இதுவரை எடுக்கப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக தகவல். அதே நேரத்தில் அவருக்கு நெஞ்சுப் பகுதியில் வலிகள் இருப்பதாகவும் அதற்காகவே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பிலிருந்து சொல்லப்படும் தகவல்கள். ஆனால், எந்த தகவலும் உறுதி செய்யப்பட்டதாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version