தமிழ்நாடு

டிஜிபி என்ன, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது: டிடிவி தினகரன்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர் வரும் 7ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் தென்காசியில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சசிகலா சென்னைக்கு வரும் 8ஆம் தேதி வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ’அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் இருக்கிறார் என்றும் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தும் விவகாரத்தில் டிஜிபி மட்டுமல்ல முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் என்றும் அவர் அதிமுக சார்பில் தான் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார். மேலும் சசிகலா தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் இருக்கின்றனர் என்றும், சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தான் உள்ளார் என்பதால் அவருடைய காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது என்றும், பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்றும், ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

டிடிவி தினகரனின் இந்த பேட்டியில் இருந்து சசிகலா சென்னை திரும்பியவுடன் தமிழக அரசியல் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version