தமிழ்நாடு

சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..!- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த உடன் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைகளில் சில, சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் தான்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான செல்லூர் ராஜூ, சசிகலா விசுவாசியாகவே இருந்து வருகிறார். சசிகலா குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும், அவருக்கு எதிராக செல்லூர் ராஜூ கருத்து சொன்னதே இல்லை.

தற்போது சசிகலா விடுதலை ஆகி வெளியே வந்த பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சகர்கள், ‘அதிமுக – அமமுக இணைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன’ என்றே தகவல் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில் அதிமுகவுக்குள் சசிகலாவின் ரீ-என்ட்ரி குறித்துப் பேசியுள்ள செல்லூர் ராஜூ, ‘ஜெயலலிதா அம்மையார் இருந்த வரையில் அவர் பின்னால் சசிகலா இருந்தார். அப்போது சசிகலாவுடன் அனைவரும் உருவாகத்தான் இருந்தோம்.

இன்றைக்கு அதிமுக என்கிற பேரியக்கத்தை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அம்மாவுடைய ஆட்சித் தொடர வேண்டும். அம்மாவுடைய அரசு தொடர வேண்டும். அதற்கு ஏற்றது போல நிலைப்பாட்டைத் தான் நாங்கள் எடுப்போம்’ என்றார்.

இப்படியான கருத்து மூலம் மறைமுகமாக சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் ஐக்கியமாவார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் செல்லூர் ராஜூ.

 

seithichurul

Trending

Exit mobile version