தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் – டிடிவி தினகரன் அதிரடி

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிடுவேன். சசிகலா தேர்தலில் களம் காணுவார்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அதிமுகவில் பொதுச் செயலாளருக்குத் தான் மொத்த அதிகாரமும் உள்ளது. எனவே பொதுச் செயலாளரான சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி போட்ட உத்தரவு எதுவும் செல்லாது. அதை மீட்பதற்கான சட்டப் போராட்டம் தொடரும்.

நாங்கள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். திமுக தான் எங்கள் பொது எதிரி. அவர்களை வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பது தான் எங்கள் நோக்கம்.

சசிகலா மீண்டும் தமிழகத்துக்கு வந்த போது, கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வரலாற்றிலேயே யாருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை. இதன் மூலம் மக்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியும்.

அமமுக ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை மீட்ப்பதற்குத் தான். அது கண்டிப்பாக நடக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பலர் சசிகலாவின் உடல்நிலை குறித்து என்னிடம் போன் மூலம் அழைப்பு விடுத்து கேட்டறிந்தனர். நண்பர் ரஜினிகாந்த், என்னிடம் அது குறித்து கேட்டு நலம் விசாரித்தார். சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் என்னிடம் பேசியிருக்கலாம். அது குறித்துப் பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை.

அதிமுக – அமமுக இணைப்பு சாத்தியமே இல்லை என்று சொல்வதை நான் 100 சதவீதம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் போது, அங்கு சசிகலா செல்வார். அதே போல அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் செல்வோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன். ஒரு தொகுதி ஆர்.கே.நகராக இருக்கும். நான் எம்.பி-யாக இருந்த தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுவேன். சசிகலாவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். அதற்கான சட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிமுகவில் யாருக்கும் ஆளுமை இல்லை. ஆளுமை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக் கூடியவர்கள் அவர்கள். ஒரு குறுட்டு அதிர்ஷ்டத்தில் அவர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேலே இருப்பவனின் ஆதரவு இருந்தது. அவ்வளவுதான். சீக்கிரம் அனைத்தும் முடிவுக்கு வரும்’ என்று கூறினார்.

 

 

 

 

Trending

Exit mobile version