தமிழ்நாடு

“இப்போ இல்ல.. ஒரு வாரமாவே சசிகலாவுக்கு காய்ச்சல்!!!”- வெளிவராத உண்மைகளை உடைத்த டிடிவி தினகரன்

Published

on

உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு நேற்று தான் திடீர் உடல் உபாதை ஏற்பட்டது என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்த நிலையில் தினகரனின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக் காலம் முடிந்து வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். அவர் வெளியே வந்த உடன், அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்றும், அமமுக – அதிமுக இணைப்பு சாத்தியம் என்றும் தமிழக அரசியல் தளத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அக்ரஹார சிறை நிர்வாகம், அவரை மருத்துவனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைக் கொடுத்து வருகிறது.

ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆக்சிஜன் சப்ளையுடன் சிகிச்சைப் பெற்று வந்த சசிகலாவின் உடல்நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் வந்துள்ளது. அதே நேரத்தில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால், சசிகலாவின் உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் சரி வர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமிதக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு வந்தார் டிடிவி தினகரன். அப்போது பேசிய அவர், ‘சசிகலாவுக்கு இப்போது அல்ல, கடந்த ஒரு வார காலமாகவே காய்ச்சல் இருந்தது. அதற்கு அவர் சிறையில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வந்தார்.

ஆனால், நேற்று மூச்சுத் திணறல் அதிகமாகவே, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் தற்போது இங்கு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு வரும் தகவல்கள்படி, அவர் நல்ல உடல்நிலையில் தான் இருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வந்த பின்னர் விளக்கமாக கூறுகிறேன்’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றார்.

அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை அவரை தினகரன் உட்பட, உறவினர்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version