தமிழ்நாடு

‘ராஜமாதா’ சசிகலா 7 ஆம் தேதி கம்-பேக் கொடுக்கவில்லையாம் – டிடிவி தினகரன் விளக்கம்

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். தற்போது அவர் அந்த தேதியில் தமிழகத்துக்கு வரவில்லை என்பதையும் கூறியுள்ளார் தினகரன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தற்போது அவர் பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த வாரம் அவர் எப்படியும் தமிழகத்துக்கு வருவார் என்றும், அதற்கு அவரது ஆதரவாளர்கள் மிகப் பெரும் வரவேற்பைக் கொடுப்பாள்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மீண்டும் தமிழக அரசியலில் காலெடுத்து வைத்தால், அவர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

தற்போது தினகரன், ‘புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம். ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்!

தியாகத் தலைவி சின்னம்மா வருகிற 8.2.2021 திங்கட்சிழமை அன்று தமிழகம் திரும்புகிறார். சின்னம்மா பூரண நலம் பெற்று தமிழகம் வருகிற அந்த நாளை திருவிழாவைப் போல கொண்டாட நாம் தயாராகி வருகிறோம். நம்மோடு தமிழ்நாட்டு மக்களும் சின்னம்மாவை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

நம்மைப் போன்றே தமிழ்நாட்டு மக்களும் சின்னம்மா அவர்களின் வருகையை பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம், நமக்குப் பெரும் ஆதரவாக மாறும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தீயசக்தியான திமுகவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்கிற தலையாய பணியை, அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நம்மிடம் காலம் வழங்கியிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு நின்று தியாகத் தலைவியின் கரங்களை வலுப்படுத்தி, அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை, அம்மா காலத்து பொலிவுடன் மீட்டெடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான திமுகவை தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டும். அந்த ஒற்றைக் குறிக்கோளில் ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு நிற்போம். புதிய சரித்திரம் படைப்போம்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version