தமிழ்நாடு

வைகோவை அனுமதிக்கக் கூடாது: சசிகலா புஷ்பா வெங்கையா நாயுடுவுக்கு பரபரப்பு கடிதம்!

Published

on

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானது.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மூலம் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. வைகோவுக்கு எதிராக துணைக்குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நான் குற்றம்சாட்டுகிறேன் நூல் வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக வைகோ மீது ஐபிசி 124(ஏ) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை என்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யாது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்தான் ஒருவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யமுடியும். இருந்தாலும் ஜனநாயகத்தின் கோயில் போன்ற இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்கக் கூடாது.

வைகோ தொடர்ந்து நாட்டிற்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக பலமுறை முழக்கங்கள் எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். இதன்மூலம் தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறார் வைகோ. மேலும், நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் பேசிய வைகோ, என்ன தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வேன் என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன். இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கும் பிரதமருக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version