தமிழ்நாடு

ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதுவும் சசிகலாதான்: அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம் ராஜேந்திரனும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து குரல் கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்துக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனையடுத்து பிரபல புலனாய்வு தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்தார் எம்எல்ஏ பிரபு. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பிரபு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா இந்த கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், அவரை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கெஞ்சியது, காலில் விழுந்தது இப்போதுள்ள முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் அனைவரும்தான்.

இன்று சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று வாக்களித்தவர் ஒருங்கிணைப்பாளர், ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர். இவர்கள் இந்த கட்சியை எப்படி வழிநடத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர்களது செயல்பாடுகளை பார்த்தால் ஜெயலலிதாவின் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் சசிகலாதான். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் இருந்து செயல்பட்டவர். ஜெயலலிதா எப்படி ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டார்களோ, அதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சியினரையும் தெரிந்தவர் சசிகலா. மேலும் தமிழகத்தில் எங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. பலமாக இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதிமுக மீது உண்மையான அக்கறை கொண்டவர் சசிகலா மட்டுமே என்றார் அவர்.

Trending

Exit mobile version