தமிழ்நாடு

‘சசிகலா – முதல்வர் சந்திப்பு பற்றி…’- நிருபர் கேட்ட கேள்விக்கு அப்செட்டான ஜெயக்குமார்

Published

on

சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரம், முதல்வர் பதவி இருக்குமை தைரியத்தில் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வந்தால், நிலைமை முழுவதுமாக மாறும் எனப்படுகிறது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை சசிகலா நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த தகவல் குறித்து நிருபர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்க, அவர் பயங்கர அப்செட்டாகி விட்டார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்குச் செல்லும் முன், யாரை முதல்வர் ஆக்கினாரோ, யார் தற்போதுத் தனக்கு எதிரியாக இருக்கிறாரோ, அதே எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க உள்ளாராம்.

இந்தச் சந்திப்பில் நிச்சயம் அரசியல் குறித்து பேசப்படும் என்றாலும், வெளிப்படையாக அதற்கானதாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார். அது குறித்து துக்கம் விசாரிக்கவே சசிகலா, முதல்வர் பழனிசாமியை சந்திப்பார் எனத் தகவல் தெரிந்த வட்டாரம் சொல்கிறது.

எடப்பாடி பழனிசாமி முகாமில், அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலர், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அது குறித்து வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள். இவை அனைத்தும் மீண்டும் அதிமுகவில் சசிகலா இணைவதற்கான நகர்வுகளாகவே தெரிகிறது.

இப்படியான சூழலில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க சசிகலா தரப்பு நேரம் கேட்டுள்ளதாக வந்துள்ள தகவல், அதிமுகவினர் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் பற்றி நிருபர்கள் சந்திப்பில் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, ‘காதுக்கு வரும் தகவல் பற்றியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. உறுதிபடுத்தப்பட்ட தகவல் பற்றி கேள்வி கேட்டால் நான் பதில் சொல்கிறேன். சசிகலா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த ஜென்மத்தில் நடக்காது’ என்று படபடத்துவிட்டு நடையைக் கட்டினார்.

Trending

Exit mobile version